கணவனை இழந்த பெண்ணிற்கு எழுதப்படாத சட்டங்கள்;வகுத்தது யார்?

0

விதவைக்கு சட்டம் வகுத்தது யார்?

சதி என்று உடன்கட்டை ஏறும் பழக்கத்தை மாற்றிய ராஜாராம் மோகன் ராய் தான் விதவைக்கு வித்திட்டவரா? அல்லது விதியை மாற்றியவரா?

அவர் செய்தது நல்லது என்று என்றாலும் கணவனை இழந்த பெண்ணிற்கு எழுதப்படாத சட்டங்கள் தான் அதிகம்.

பொட்டு வைக்க, பூ வைக்க மறுத்த சமூகம், அவளது உணர்வுகளை மறந்துவிடுகிறது. பிள்ளைகளுக்காக உன் வாழ்க்கை என்றுரைத்த சமூகம் அவள் வாழ்க்கையை இவ்வளவு தான் என்ற முடிவு எடுக்கிறது.

கல்யாண வீடு போனாலும், காதுகுத்து வீடு போனாலும், கோயில் குளம் போனாலும் ஒதுங்கியே நிற்க வேண்டும் இதுவும் ஒரு சட்டம்.

சமுதாயத்தை எதிர்த்து தைரியமாய் வெளியே போனால் வெளியே எங்கே போய் சுற்றிவிட்டு வருகிறாளோ? வசைபாடும்  சுற்றத்தாரின் சட்டம்.

மறுமணம் பற்றி யோசித்தால் கணவன் சொத்தில் உரிமை இல்லை என்கிறது இந்திய சட்டம்.

இன்னொருவனை கை பிடித்தால், தன் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு பற்றிய பயம்.

இப்படியே நாட்கள் நகர்ந்து, அவளது ஏக்கம் மறந்து , சிலையாய் உயிரற்று போகிறாள்.

பெண்ணிற்குப் பெண்ணே எதிரியாய் பல நேரங்களில்,

அவளது இடத்தில் தன்னை வைத்து யோசித்திருந்தால் இந்த சட்டம் எல்லாம் நிற்காமல் போயிருக்கும்.


ஆண்களில் நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள், காலம் மாறும் போது சமூகம் மாறும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.

என் விதவை தோழி ரெண்டு குழந்தைகளை விட்டு தூக்குக் கயிறை முத்தமிட்டால்..அவளுக்கு தூக்குக் கயிறை கொடுத்தது யார்?







இந்த சமூகமா, ஆண்களின் வக்கிர பார்வையா, உறவினர் பெண்களின் சந்தேக பார்வையா,பொருளாதாரப் பின்னணியா, சொந்தக்காலில் நிற்க வேண்டிய தைரியம் இன்மையா? எது என்றே தெரியவில்லை.

ராஜாராம் மோகன்ராய் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் நீங்கள் சீர்திருத்தம் என்று எதையும் செய்யாமல் இருந்திருந்தால், இன்று தனியாய் போனவள் பூவும் பொட்டுமாய் போய் இருப்பாள் கணவனோடு உடன்கட்டை ஏறி......

எழுதப்படாத சட்டங்கள் எதையும் ஏற்காமல் நிம்மதியாய் போயிருப்பாள்.......

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)