புலி வாலை பிடித்தது போல், பல நேரங்களில் என் வாழ்க்கை.
வேண்டுமென்றால் வேண்டாம் என்பான்,
வேண்டாம் என்றால் வேண்டும் என்பான்.
அவன் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பான்,
பெண்ணின் பேச்சைக் கேட்காத பிடிவாதம் வேறு,
அவளுக்கு என்ன தெரியும் என்ற ஆணாதிக்கம் வேறு.
நாம் சொல்வதை கேட்காத அவனது ஆணவம்,
அவன் சொல்வதைக் கேட்க வைக்கும் அதிகாரப் போக்கு.
அன்புக்கு அடிமையாவதே திருமணபந்தம்-ஆனால்
பயந்து பயந்து அடிமையாவதே நிதர்சன உண்மை.
நீ வலியவன் தான் ஆனால், உன்னை விட வலிமை குறைந்த
பெண்ணிடம் வீரத்தைக் காட்டுவது உன் ஆண்மைக்கு அழகா
குடித்து குடித்து போதை தலைக்கேறி மிருகமாகிறான்.
மிருகத்தோடு குடும்பம் நடத்தும் மனித இனம் நாங்கள்.
மற்றவர்களைப் பற்றி குறை கூறுவான், ஏனென்றால்
இவனைப் பற்றி யாரும் குறை கூறக்கூடாது என்பதற்காக.
சுயநலம் இல்லாமல் எல்லாரிடமும் அன்பு காட்டுவார்,
சுயத்தை இழந்து போதை தலைக்கேறிய நேரத்தில்
சுயநலத்தோடு அதிகம் இருப்பான், போதை இறங்கி, சுயநினைவு
வந்தவுடன் தன் பிள்ளை, தன் மனைவி. தன் வீடுஎன்றிருப்பான்.
எங்களுக்காக பொறுப்புடன் உழைக்கும் குடும்பத் தலைவராய்,
என் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் செய்யும் ஆசைத் தகப்பனாய்,
சமூக அக்கறையுடன் கடமை செய்யும் காவலராய்,
பணி புரியும் சக காவலருக்கு மிகச்சிறந்த நண்பராய்,
பெண் காவலர்களுக்கு அறிவுரை கூறும் ஆலோசகராய்,
உதவி என்று கேட்பவர்களுக்கு மனமிரங்கி உதவி செய்பவராய்
இவ்வளவு நல்ல குணம் இருந்தும் என்ன?
அவர் குடித்துவிட்டு பேசும் வார்த்தைகளைக் கேட்டு,
என்னிடம் நடந்து கொள்ளும் அடக்குமுறையை பார்த்து
மனநோயாளியாக, வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்
புலி வாலை விட்டால் கடித்து விடுமோ என்ற பயத்தால் பிடித்துக் கொண்டே
வாழ்வது போல் இருக்கிறது என் வாழ்க்கை பல நேரங்களில்.
குடி இல்லாத நேரங்களில், குடும்பங்களில் அன்பு அதிகமாகும்போது
புலி மேல் அமர்ந்த ராணியை போல் இருக்கிறது
என் வாழ்க்கை சில நேரங்களில்,
இந்த வாழ்க்கை நீடிக்குமா என்று ஆசைப்படுகிறேன் பலநேரங்களில்.




படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.