குறள்- நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
பொருள்: தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் செல்போன் கடைக்காரர் பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இருவரையும் கொடூரமாக போலீசார் தாக்கியதால் தான் இறந்ததாக கூறப்படுகிறது.
சாத்தான்குளத்தில் சேர்த்தவர் ஜெயராஜ், இவரது மகன் பெனிக்ஸ் இவர்களுக்குச் சொந்தமான செல்போன் கடை சாத்தாங்குளம் மெயின் ரோட்டில் உள்ளது
கடந்த 19ஆம் தேதி இரவு செல்போன் கடையை மூடச் சொல்லி இருவரிடமும் போலீசார் கூறினர் .
அப்பொழுது போலீஸாருக்கும் ஜெயராஜிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜெயராஜை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். உடனே மகன் பென்னிக்ஸும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அவர் போலீசாரிடம் சமாதானம் பேச முயன்றார், அப்போது தந்தை மகன் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இருவரையும் 20ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர்.
22ம் தேதி பென்னிக்ஸ் மாரடைப்பால் இறந்ததாகவும், அவர் இறந்து ஐந்து மணி நேரம் கழித்து அவர் தந்தையும் இறந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஊரடங்கு காலத்தில் சிறிது நேரம் தாமதமாக கடையை அடைத்ததால் அவர்களை மிகக் கொடூரமாக ஆசனவாயில் லத்தியை வைத்து அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அதனாலேயே அவர்கள் இறந்தனர் என்று வணிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் அரசாங்கமோ இது மாரடைப்பு என்று கண்துடைப்பு செய்கிறது. அந்த காவல்துறை அதிகாரிகளுக்கு இடம் ஆறுதலையும், பணியிடை நீக்கம் அழித்துவிட்டு அவர்கள் குடும்பத்திற்கு 20 லட்சமும் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசாங்க வேலை என்று அறிவித்துள்ளது.
இது சரியான நீதியா என்று தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவரும் உணர வேண்டும்.உலகத் தமிழர்கள் எங்கிருந்தாலும் இது சரியா என்று யோசிக்க வேண்டும்.
முன்னொரு காலத்தில் மனுநீதிச் சோழன் என்ற மன்னர் இருந்தார். அவர் தன் தேரில் ஏறி நகர்வலம் வந்துக் கொண்டிருந்தார் அப்பொழுது ஒரு கன்றுக்குட்டி அவர் தேர் சக்கரத்தில் மாட்டி உயிரை விட்டது. ஆனால் மன்னர் அதை கவனிக்கவில்லை.
அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் தங்கள் குறைகளை சொல்ல, ஒரு பெரிய மணி ஒன்றை கட்டி உங்களுக்கு நீதி மறுக்கப்படும்போது இந்த மணியை அடியுங்கள், அதற்கான உதவிகளை செய்வேன் என்று கூறி இருந்தார்.
தேர் சக்கரத்தில் மாட்டி உயிரிழந்த கன்றுக்குட்டியை பார்த்த தாய்ப்பசு, ஓடிச்சென்று அந்த மணியை அடித்தது.
மன்னரும் வெளியே வந்து பார்த்தபோது பசுவின் கண்களில் கண்ணீராகவும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த மன்னர் தன் காவலர்களிடம் விசாரித்தார் .தாங்கள் ஏறிச் சென்ற தேரின் சக்கரத்தில் பசுவின் கன்று குட்டி சிக்கி உயிரை விட்டது என்றனர். இதை சற்றும் யோசிக்காத அந்த மன்னர், தன் ஒரே மகனை அதே தேர்ச் சக்கரத்தின் காலில் வைத்து ஏற்றி மகனைக் கொன்றார்.
பசுவிற்கு ஏற்பட்ட துயரம் தனக்கும் நேர்ந்தால் தான் தாய்ப் பசுவின் வலி புரியும், உண்மையான நீதியாக இருக்கும் என்றார். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனுநீதிச் சோழனின் நீதி பறை சாற்றப்படும்.
ஆனால் நம் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் கொலை வழக்கில் காவல்துறை அமைச்சராக இருக்கும் முதலமைச்சர் அவர்கள் இதை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார்.
தனி ஒருவனின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் இன்றைய அரசாங்கத்தை அழித்து விடுவோம் என்றால் மக்கள் முடிவெடுத்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்.
குடும்பத்தினர் நீதி வேண்டும் என்று தான் கேட்கிறார்கள் உங்கள் பணத்தையோ அரசாங்க வேலையை எதிர்பார்க்கவில்லை. ஒரு தந்தையையும்,மகனையும் கொன்றதற்கு உண்மையான நீதி வேண்டும்.
பசுவின் இடத்தில் இருந்து,யோசித்த மனுநீதிச் சோழனைப் போல் இல்லையென்றாலும்,அக்குடும்பத்தில் ஒருவரைப்போல் யோசித்து நீதி வழங்குங்கள்.

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.