
ஒரு காலத்தில் செவிலியர் பணி என்பது மரியாதைக்குரிய பணியாக கருதப்படவில்லை. மிகவும் ஏழை குடும்பத்தில் சேர்ந்தவர்களே செவிலியர் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலைமையை மாற்றி செவிலியர்களுக்கான சமுதாயத்தில் ஒரு நல் மதிப்பை உருவாக்கியவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆவார். இங்கிலாந்தில் செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக செவிலியர் பணியில் ஈடுபடுத்திக்கொண்டார். 1844 டிசம்பரில் லண்டனில் இருந்த ஆதரவற்றவர் விடுதியில் உயிரிழந்த ஏழையின் மரணமே இவரது பாதையை மாற்றியது. அவர்களுக்கு உதவ யாருமே இல்லையே என்று மனம் வருந்தினார். அதுமுதல் ஏழைகள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டார். 1854 இல் கிரிமியன் போரில் பாதிக்கப்பட்ட படைவீரர்கள் குத்துயிரும் குலை உயிருமாக இறக்கும் தருவாயில் இருந்தனர் 
அந்த ராணுவ மருத்துவமனைக்கு 38 செவிலியருடன் சென்றார் பிரண்ட்ஸ் நைட்டிங்கேல். உயிருக்குப் போராடிய முழு படையையும் தன்னிடம் இருந்த குறைந்த மருத்துவ வசதியை கொண்டும், அன்போடும் குணப்படுத்தினார். அந்த இரவு வேளையில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கினார். அதனால் தான் அவர் "கைவிளக்கேந்திய காரிகை" என்று அழைக்கப்பட்டார். மேலும் அவரை" விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு வந்த தேவதை" என்று படைவீரர்கள் அழைத்தனர் .அவர் பிறந்த மே 12-ஆம் நாளை உலக செவிலியர் தினமாக கொண்டாடுகிறார்கள்.
இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12-ஆம் தேதி லண்டனில் உள்ள மாளிகையில் செவிலியர் மூலம் விளக்கு ஏற்றப்பட்டு, அங்கு வருகை தரும் ஒவ்வொரு செவிலியரிடம் கைமாறப்பட்டு பின்னர் அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகிறது. இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தனது அறிவையும் அனுபவத்தையும் பரிமாறப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.தமிழ் நாட்டில் மெழுவர்த்தி ஏந்தி,ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டாடுகிறார்கள். அதன்பிறகே செவிலியர் பணிக்கு மரியாதையையும் கண்ணியத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்று கூறப் பட்டது.
செவிலியர்களை இன்னொரு தாய் என்றே நாம் கூறலாம்.பல சமயங்களில் மருத்துவரை விட இவர்களின் பணியே சிறந்ததாக உள்ளது.தன் குடும்பம்,குழந்தைகளை கவனிக்க முடியாமல் இரவு பகலாக கண் முழித்து,மற்றவர் வலிகளுக்கு மருந்து போடுகிறார்கள்.
கொள்ளை நோய்கள் வந்து நம்மை தாக்கும் போதும், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போதும் குழந்தை பிறப்பின் போதும் அவர்களின் பணி இன்றியமையாதது.பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை இவர்கள் காட்டும் அன்பும்,அக்கறையும் வார்த்தைகளால் சொல்ல முடியாதது.
ஒரு குழந்தையின் கவிதை,
என் அம்மாவும் அப்பாவும் என்னை கைகளில் ஏந்துவதற்கு
முன்னே என்னை ஏந்திய முதல் கைகள் உங்கள் கைகள் தான்,
என்ற வரிகள் செவிலியரின் மேன்மையைக் காட்டுகிறது

சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து, சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத்தன்மையுடன் செய்யும் மகத்தான பணியே செவிலியர் பணி .அது ஒரு பணி என்று சொல்லாமல் தாயுள்ளம் கொண்டு அர்ப்பணிப்போடு செய்யும் ஒரு தொண்டு என்றே சொல்ல வேண்டும். நம் நாட்டில் சிஸ்டர் என்று அழைக்கிறோம் ஆனால் அவர்கள் தாய்க்கு நிகரான அன்புள்ளம் கொண்டவர்கள். எனவே அவரை நர்ஸ் அம்மாக்கள் என்று அழைப்போம். வாழ்க வளமுடன்.

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.