50 பேரின் 68000 கோடியை தள்ளுபடி செய்த அரசு,எங்களின் சில லட்ச நகைக் கடனை தள்ளுபடி செய்யுமா?

0
 50 பேரின் 68000 கோடியை தள்ளுபடி செய்தது எப்படி?




வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றி விட்டு தப்பி ஓடிய மல்லையா, மெகுல் சோக்சி உட்பட 50 பேரின் 68,000 கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்தது ஆர்டிஐ மனு மூலம் அம்பலமாகியுள்ளது. ஊரடங்கை தொடர்ந்து நிறுவனங்கள், தொழில் துறைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இந்த சூழ்நிலையில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி வரி வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தொழில் துறையினருக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி நிதி வழங்கும் அளவுக்கு வங்கிகளின் நிலை படுமோசமாக உள்ளது. இத்தனைக்கும் நடுவில் மோசடி செய்தவர்களின் 68,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சாகேத் கோகலே என்பவர் தாக்கல் செய்த ஆர் டிஐ மனுவிற்கு, மத்திய அரசு வெளியிட மறுத்த விவரங்களை ரிசர்வ் வங்கியின் பொது அதிகாரி அபய் குமார் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நிலுவையில் இருந்த 68 ஆயிரத்து 607 கோடி கடன் கணக்கீட்டு ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
கடன் வாங்கிய நிறுவனமும், தள்ளுபடி கடன் தொகையும்.
கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம்- 5,492 கோடி,
ரெய் அக்ரோ லிமிடெட்- 4,314 கோடி,
வின்ஷம் டைமண்ட் ஜுவல்லரி- 4,076 கோடி,
ரோட்டோமக் கிலோபல் நிறுவனம்- 2,850 கோடி,
குடோஸ் கெமி லிமிடெட்- 2,326 கோடி,
ருசி சோயா இன்டஸ்ட்ரீஸ் -2,212 கோடி,
ஜூம் டெவலப்பர்ஸ் - 2,012 கோடி,
பார்ரெவர் பிரேசியஸ் ஜுவல்லரி அண்ட் டைமெண்ட்ஸ்-- 1,962 கோடி,
கிங்பிஷர் ஏர்லைன்ஸ்- 1,943 கோடி
கிலி இந்தியா- 1,447 கோடி.
இந்த 50 கடன் மோசடியாளர்களில் அதிக கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 6 பேர் வைரம் மற்றும் நகை தொழில் துறையை சேர்ந்தவர்கள். கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் நிறுவனத்தின் உரிமையாளர் மெகுல் சோக்சி தற்போது ஆண்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று தலைமறைவாக உள்ளார்.இவர் லண்டனில் தலைமறைவாக உள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினர் ஆவார். இதேபோல் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தின் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறுகையில் இந்த நிறுவனங்களின் கடன் தள்ளுபடி என்பது வங்கிகளின் லாபத்தில் குறைத்துக்கொண்டு கடனுக்காக அவற்றை ஒதுக்கி வைப்பதாகும்.உதாரணமாக ஒருவர் 100 கோடி கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனை வசூலிக்க வழி இல்லை எனத் தெரிய வந்தால் வங்கிகள் தங்களுக்கு கிடைத்த லாபத்தில் அதை கழித்துக் கொள்ளும். அதாவது 200 கோடி லாபம் வந்திருந்தால், அது கடன் தொகையாக 100 கோடியை கழித்துவிட்டு வங்கிற்கு கிடைத்த லாபம் 100 கோடி என அறிவிக்கப்படும். இந்தக் கடன் தள்ளுபடி கடன் வாங்கியவர்களுக்கு தெரிவிக்கப்பட மாட்டாது. அதே நேரத்தில் கடன் நிலுவையில் காண்பிக்கப்பட மாட்டாது. கடன் வாங்கியவர் ஒருவேளை கடனை கொடுத்தால் அது கடனில் வரவு வைக்கப்படும். கடன் தள்ளுபடி என்ற கூறினாலும் வங்கிகளுக்கு இது நஷ்டம்தான். ஆனால் நிதி இல்லை என்று கூறி அரசு ஊழியர்களின் பஞ்சப்படி முடக்கப்படுகிறது என்றார்.சாதாரண ஏழை விவசாயின் கடனுக்காக அவனைத் தற்கொலைக்கு தூண்டும் அரசு,பல ஆயிரம் கோடிகளை ஏப்பம் விட்ட இவர்களுக்கு தலைமறைவாக வாழ,தள்ளுபடி செய்கிறது.வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)