அங்கீகாரம் ஏதும் இல்லாத குடிகாரர்களின் மனைவிகள் சங்கம்

0
அங்கீகாரம் ஏதும் இல்லாத  குடிகாரர்களின் மனைவிகள் சங்கம்.

உலகில் எத்தனையோ சங்கங்கள் இருந்தாலும் எங்களுக்கு என்று ஒரு சங்கம் இல்லை. அதனால் அங்கீகாரம் இல்லாத இந்த சங்கத்தின் மூலமாக கூறுகிறேன்.

அரசாங்கமும் அதிகாரிகளும் கொஞ்சம் யோசியுங்கள். உலக சுகாதார நிறுவனமே பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை ஏன் நம் நாட்டில் தயாரிக்க அனுமதி தருகிறீர்கள்.

எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் என்று.

அதைப்போல் மது பாட்டிலில் குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற வசனம் அச்சிடப்பட்டிருக்கும்.

 இதைப்போல் சிகரெட், பான்பராக் இன்னும் பல போதைப் பொருட்களையும் தயாரிக்க அனுமதி அளித்துவிட்டு நோயையும் உருவாக்கி விடுகிறார்கள்.

 திருவிழாக்காலங்களில் இலக்கைக் குறிவைத்து விற்பனை செய்யும் அரசால் மக்களின் நலனை பற்றி அக்கறை இல்லை.
மக்களின் மீது அக்கறையுள்ள அரசு படிப்படியாக மதுவிலக்கை அமுல் படுத்தினால் நல்லது. நாம் தான் போராட வேண்டும்.

 குடிகாரர்களின் மனைவிகள் எல்லாம் ஒன்று கூடினால் தமிழ்நாடு சீர்குலைந்து விடும். ஒரு நாள் அரசு மதுபான கடை முன் நின்று நமது எதிர்ப்பை சொன்னால் அரசு அடிபணியும் நாள் வரும். அந்த தைரியம் நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது.

 நமது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து ஒன்று கூடுவோம். மது போதை இல்லாத இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
தகுதிகள்
எங்கள் சங்கத்தில் சேர உங்களுக்கு ஒரு தகுதியும் வேண்டாம்
அவர் பேசும் வார்த்தைகளைக் கேட்டு உங்களுக்கு கோபம் வேண்டாம்,
உங்களுக்கு எனஆசை வேண்டாம்.
எதிர்காலம் குறித்து ஏங்க வேண்டாம்.
புது வீடு கட்டலாம் என்ற கனவு வேண்டாம்.
வங்கியில் அடகு வைத்த நகையை அணியும் ஆசை வேண்டாம்.
சபைக்கு அவருடன் சேர்ந்து செல்லும் ஆசை வேண்டாம்.
குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கனவு வேண்டாம்.
அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்கி இருக்க வேண்டும்.
அடி வாங்கிய காயங்கள் வேண்டும். இந்த மனக்குமுறல்கள் தான் உங்கள் தகுதிகள்.
கோரிக்கைகள்
அரசாங்கம் நடத்தும் மதுபான கடைகளால் தான் வருமானம் வருகிறது என்று அரசே சொல்கிறது. 

அந்த வருமானம் வரவில்லை என்றால் அரசாங்கம் நடத்த முடியாது என்று சொல்கிறது அரசு. 

அது எங்கள் வீட்டிற்கு வர வேண்டிய வருமானம். அந்த வருமானம் வீட்டிற்கு வரவில்லை என்றால் குடும்பம் நடத்த முடியாது. 

குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுக்க முடியவில்லை பள்ளிக்கு பணம் கட்ட முடியவில்லை.

 வங்கியில் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியவில்லை. நகையை திருப்ப முடியவில்லை. 

எனவே எங்கள் கடனை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். நகைகளை அரசே திருப்பித் தர வேண்டும்.

குடிகாரர்களின் மனைவிகளுக்கு அரசு வேலை வேண்டும் செய்ய முடியுமா உங்களால்?
இதுவே அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை.
வேண்டுகோள்
  • மனைவிகளே நீங்கள் ஒரு போதும் குடிகாரர்களை ஏசாதீர்கள் .கோபப்படாதீர்கள். உங்கள் கோபம் அரசாங்கத்திற்கு எதிராகத்தான் இருக்க வேண்டும்.
  •  அரசே அவர்களை இப்படி தள்ளி விட்டிருக்கிறது . இதிலிருந்து மீள அவர்களிடம் அன்பு காட்டுங்கள்.அரவணைப்பாக இருங்கள்.
  •  ஒரு நாள் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவார்கள் என்று நம்பிக்கை வையுங்கள். வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)